ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரது நண்பர் என்று கூறும் பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. அதையெல்லாம் நாங்கள் அன்றைக்கு அரசியலாக பார்க்கவில்லை. இருப்பினும் திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் வந்து பார்த்து சென்றுள்ளார். அப்போது கூட அதை நாங்கள் அரசியலாக கருதவில்லை. ஆனால் தற்போது ஜெயலலிதாவின் வீட்டிலேயே, அதிமுக பொதுச்செயலாளர் அறையிலேயே சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஆணை வாங்கி வருகிறோம் என்று அதிகாரிகள் கூறும் போது, இதில் ஏதோ சதியிருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன். அனைவருக்கும் தெரியும் வருமான வரித்துறையை கையில் வைத்துக்கொண்டு சதி செய்வது யாரென்று” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு ஒரு இயக்கம் வளரலாம் என்று நினைத்தால் நிச்சயம் அவர்கள் அழிந்துபோவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் என்றைக்கும் நல்லவர்கள் பக்கம்தான் நிற்பார்கள். இதுபோன்ற இடையூறு செய்பவர்களுக்கு நிச்சயம் காலம் தண்டனை வழங்கும். கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி. அதுபோல ஆயுதம் எடுத்தவர்கள் எந்த ஆயுதமாக இருந்தாலும் சரி, அதில் தான் அவர்களுக்கு வீழ்ச்சி. இதுபோன்ற சோதனைகளால் நாங்களோ, எங்கள் தொண்டர்கள் நிச்சயம் அஞ்சமாட்டோம்” என்றும் தெரிவித்தார்.