டிரெண்டிங்

“அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லை” - டிடிவி தினகரன்

“அதிமுகவுடன் இணைய வாய்ப்பு இல்லை” - டிடிவி தினகரன்

webteam

அதிமுகவுடன், அமமுக இணைய வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை பொறுத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மாநில இந்தியக் குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணி அமைக்கும் என்றும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அதற்காக தினகரனை சந்தித்து வலியுறத்த உள்தாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுகவும், அமமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து அவரது தனிப்பட்ட விருப்பம் என்று தினகரன் விளக்கமளித்துள்ளார். திருச்சி சுப்ரமணியபுரத்தில் அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன், கட்சி கொடியை ஏற்றி வைத்துவிட்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து அவர்,  “அ.தி.மு.க வுடன் மீண்டும் நாங்கள் இணையமாட்டோம். துரோகிகளிடமிருந்து விலகி வந்து விட்டோம். அவர்களிடம் மீண்டும் சேர வாய்ப்பில்லை,அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை.மத்திய அமைச்சர் அத்வாலே அவருடைய ஆசையை கூறியுள்ளார்” என்று தெரிவித்தார். 

மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவுகளை மோடி தான் நிறைவேற்றி வருகிறார் என்று கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று தான் அவர்கள் விரும்பினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்துவது எவ்வாறு எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா கனவை மோடி நிறைவேற்றுகிறார் என கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து, “பா.ஜ.கவை எதிரான கருத்துக்களை தம்பிதுரை பேசி வருவது நாடகம். எடப்பாடி பழனிச்சாமி கூறியே அவர் அவ்வாறு பேசி வருகிறார். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.தேர்தல் வருகிறது என்றால் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.