டிரெண்டிங்

ஏற்ற இறக்கங்கள் கொண்ட டிடிவி தினகரனின் அரசியல் பாதை..!

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இடைத்தேர்தலில் பெற்றுள்ள இந்த வெற்றி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மூத்த மகன்தான் டிடிவி தினகரன். திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன்-வனிதாமணி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவர்களில் சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக 1990களின் மத்தியில் இருந்தார். சசிகலாவின் மற்றொரு மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது மாமன் மகளையே தினகரன் மணம் புரிந்துகொண்டார்.

அதிமுக பொருளாளராகவும் இருந்துள்ள டிடிவி தினகரன், 1999-ம் ஆண்டு பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார்.

இதனிடையே 1998 ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் தினகரனுக்கு அமலாக்கத் துறையால் 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது. தினகரனின் அரசியல் வாழ்க்கை இப்படி ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக இருந்த நிலையில் 2011-ல் சசிகலா உள்ளிட்டோருடன் தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. இதைத்தொடர்ந்து நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்தார்.

ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சசிகலாவும், பிறகு எடப்பாடி பழனிசாமியும் சென்ற போது அவர்களுடன் இருந்தவர் தினகரன். தற்போது சசிகலா சிறை சென்றுள்ள நிலையில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த நிலையில், சசிகலா தலைமையிலான அணியில் டிடிவி தினகரன் தொடர்ந்தார். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருந்த கட்சியின் பெயரும், சின்னமும் பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையிலும், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.