நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக நாளை சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனிடையே நீட் தேர்வுக்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துவிட்டது. இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், " நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ஆர்ப்பாட்டம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும். 21 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் உள்ளனர். அப்படியிருக்க 135 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறான தகவல். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தில் பொறுமையாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளர் அல்லது துணை பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி அணி போலி பொதுக்குழுவை கூட்ட இருக்கிறது. அதில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமகள் அனிதாவிற்கு அஞ்சலி செலுத்த அங்கு அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. இதிலிருந்தே இந்த அரசு மீது மக்கள் எவ்வளவு நல்லெண்ணம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்" என்று தெரிவித்தார்.