டிரெண்டிங்

”உதவுவதும் ஒரு வகையான Vibeதான்” -8 லட்சம் பேர் பார்த்துள்ள வீடியோவில் அப்படி என்ன இருக்கு?

JananiGovindhan

நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ட்ரக் டிரைவர் ஒருவர் முதிய பெண் ஒருவருக்கு சாலையை கடக்க உதவும் வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலாகியிருக்கிறது.

சாலையை கடக்க உதவுவதுலாம் வழக்கமாக செய்வதுதானே? இதில் என்ன நெகிழ்ச்சியும் வைரலும் இருக்கிறது என கேள்வி எழலாம். ஆனால் அந்த வீடியோ எட்டு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

டன்சு யேகன் என்ற ட்விட்டர் வாசி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோதான் நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது. அவர் பகிர்ந்த வீடியோவில், தண்ணீர் தேங்கிய சாலையை கடப்பதற்காக மூதாட்டி காத்திருந்த நிலையில், அருகே இருந்த ட்ரக் டிரைவர் அந்த மூதாட்டிக்கு உதவும் வகையில், டிரக் லாரியின் பின்புறம் உள்ள ராம்ப் தளத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

அதனையடுத்து ராம்ப் தளத்தில் ஏறிய அந்த மூதாட்டி தண்ணீர் தேங்கிய சாலையில் சிக்காமல் தன்னுடைய காரில் ஏறி சென்றிருக்கிறார். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக “எல்லா ஹீரோக்களும் கேப் அணிந்துக் கொண்டிருப்பதில்ல. சிலரிடம் எலிவேட்டர் ராம்ப்பும் இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் ட்ரக் டிரைவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.