முத்தலாக்கை தடை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதையடுத்து முத்தலாக்கை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. 3 முறை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வோருக்கு கிரிமினல் குற்றமாக கருதி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முத்தலாக் தடை மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வருவதால், அதனை கிரிமினல் குற்றமாக கருதக் கூடாது என்று பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தார்.
தற்போது கொண்டு வந்துள்ள மசோதா, இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, அதிமுக எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக, முத்தலாக்கை தடை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். மாநிலங்களவையில் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.