திருச்சியில் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.
சேலம் ஆத்தூர் அருகேயுள்ள பண்ணையார் வீட்டில் பிறந்தவர் தேவதாஸ். மருத்துவரான இவர், எம்பிபிஎஸ் முடித்து பின்னர் எம்டிசிஎச் படித்து, குழந்தைகள் நல மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றவர். அரசு மருத்துவராக பணிக்காக திருச்சிக்கு வந்த இவர், ஒவ்வொரு பிரிவிற்கும் மருத்துவம் தனித்தனியாக இல்லாத காலத்திலேயே குழந்தைகள் மருத்துவர் என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் டி.எம்.ஓ, ஆர்.எம்.ஓ என பல்வேறு பதவிகளை வகித்தவர். ஓய்விற்குப்பின் திருச்சி ஜாபர்ஷா தெருவில் சிறிய அளவில் கிளினிக் ஒன்றை தொடங்கினார். அங்கு வந்த நோயாளிகளின் கூட்டம் அதிகரிக்கவே பின்னர் திருவானைக்கோவிலுக்கு மாறினார். தொடக்கத்தில் மாட்டுவண்டியில் கிளினிக் சென்று வந்தவர், பின்னாளில் கார்களில் சென்றார். அரசுத்துறைகளில் பல்வேறு பதவிகள் வகித்ததால் வரும் பென்ஷனே அவருக்கு போதுமானதாக இருந்தது.
முதன் முதலில் ஒரு ரூபாய்க்கு தொடங்கிய அவரது மருத்துவ சேவை இறுதியாக பத்து ரூபாயில் வந்து நின்றுள்ளது. ஏழைகள் பலரிடம் மருத்துவ கட்டணம் வாங்காமல் மருத்துவம் பார்த்து அனுப்பினார். அத்துடன் பலருக்கு படிப்பு, வாழ்க்கை என உதவிகளை செய்துள்ளார். ஏழைகளின் மனதை கொள்ளை கொண்ட இம்மாமனிதர் கொரோனா வைரஸ் எனும் இரக்கமற்ற கொடூரத்தால் உயிரிழந்தார். இவரது மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.