அப்துல் கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - அயோத்தி இடையேயான புதிய விரைவு ரயிலை தொடங்கி வைத்ததோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க தனுஷ்கோடி சாலையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக, இந்த புதிய ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.50 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும். அங்கிருந்து மானாமதுரை, திருச்சி சந்திப்பு, தஞ்சை, விழுப்புரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்ஷா, நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், சாட்னா, அலகாபாத், ஜான்பூர் மற்றும் அயோத்தி வழியாக புதன்கிழமை காலை ஃபைசாபாத் சென்றடையும். அங்கிருந்து மறு மார்க்கத்தில், புதன்கிழமை இரவு பைசாபாத்திலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் வந்தடையும்.
அதேபோல, 71 கோடி ரூபாய் செலவில் 9.4 கிலோ மீட்டர் தூரத்துக்குப் போடப்பட்ட தனுஷ்கோடி சாலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மதுரை தேசிய நெடுஞ்சாலையோடு அந்த புதிய சாலை இணைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தனுஷ்கோடி நகரம் அழிந்தது. அதன் பிறகு அடிப்படை வசதிகளின்றி இருந்த சுற்றுலா தலமான தனுஷ்கோடியைக் காண, பொதுமக்கள் கடல் மார்க்கமாக மட்டுமே பயணிக்க வேண்டியிருந்தது. தற்போது புதிய சாலை அமைக்கப்பட்டதையொட்டி, மீண்டும் ஒரு வர்த்தக நகரமாக தனுஷ்கோடி உருவாகுமென அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.