டிரெண்டிங்

ஹாசினி வழக்கில் மேல் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

Rasus

ஹாசினி வழக்கில் தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் அருகே உள்ள மதனநந்தபுரம் பகுதியில் வசித்து வந்த ஏழு வயது சிறுமி ஹாசினியை, பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால், தஷ்வந்தால் ஜாமீனில் வெளிவரமுடியவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்தது. தனது மகளை கொடூரமாக கொலை செய்த தஷ்வந்திற்கு கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த ஹாசினியின் பெற்றோர்களுக்கு இச்சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. மேலும், தஷ்வந்த்-க்கு ஜாமீன் கொடுத்ததற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ஹாசினி வழக்கில் தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பாடமாக அமையும் வகையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட ஜெயக்குமார், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.