டிரெண்டிங்

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

நாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

webteam

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. 

இதைத்தொடர்ந்து மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழக அரசின் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

மக்களவைத் தேர்தல் வருவதால் மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பிப்.11 முதல் 18-ம்தேதி வரை பேரவை நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும், இறுதி நாளில் விவாதத்துக்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்றும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும் மாலை ஸ்டாலினை திமுக எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். எம்.எல்.ஏக்களில் பலர் திமுக மாவட்ட செயலாளராகவும் பலர் உள்ளனர். இதனால் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் குறித்து என்னென்ன கேள்விகள் எழுப்ப வேண்டும். யாரெல்லாம் எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும். எம்.பி தேர்தல் நடைபெறும் முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் இதுவென்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விவாதத்தின் போது மக்களுடைய பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.