டிரெண்டிங்

முன்னாள் ஊழியர் போட்ட ஸ்கெட்ச்.. கல்குவாரியில் ரூ. 6.5லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல்.!

முன்னாள் ஊழியர் போட்ட ஸ்கெட்ச்.. கல்குவாரியில் ரூ. 6.5லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல்.!

kaleelrahman

சொகுசாக வாழ ஆசைப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கல்குவாரியில் 6.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கல்குவாரியின் முன்னாள் ஊழியர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில், பொன்ராஜ் என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் தேதி பணியில் இருந்தபோது, திடீரென அலுவலகத்துக்குள் புகுந்த 11 பேர் கொண்ட கும்பல், கத்தி முனையில் பொன்ராஜை கட்டிப்போட்ட லாக்கரில் இருந்த ஆறரை லட்சம் ரூபாயை திருடிக் சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், கல்குவாரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் அதே கல்குவாரியில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான அன்வர் ஷெரிஃப், சிலருடன் அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்சி பதிவாகியிருந்தது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, 10 பேர் கொண்ட கும்பலை வைத்து கல்குவாரியில் கொள்ளையடித்தது தெரியவந்தது.


ஏற்கெனவே அன்வர் அந்த கல்குவாரியில் பணிபுரிந்ததால், பணம் எப்போது கொண்டுவரப்படும், எங்கு வைக்கப்படும் என்ற விவரத்தை அறிந்து கொள்ளைக்கு திட்டம் தீட்டியதாக தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தால் வேலையில்லாமல் இருந்த நிலையில், சொகுசாக வாழ ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட கூட்டாளிகளுடன் அன்வர் ஸ்கெட்ச் போட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தைச் சேர்ந்த கூட்டாளிகள் மற்றும் அன்வர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.