டிரெண்டிங்

அசாம் தம்பதிக்கு பீட்சா விருந்து கொடுத்து அசத்தும் பீட்சா ஹட்.. என்ன காரணம் தெரியுமா?

JananiGovindhan

கலாசாரம், பண்பாடுகள், சடங்குகள் நிறைந்த திருமணங்களின் போது சில கேளிக்கையான, மக்களை கவரும் வகையிலான நிகழ்வுகள் எப்போதும் அரங்கேறுவதுண்டு. அந்த வகையில், அசாமைச் சேர்ந்த ஷாந்தி பிரசாத் மற்றும் மிந்து ராய் ஆகியோர் தங்களது திருமணத்தின் போது ஒருவருக்கு ஒருவர் சில ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டனர்.

அதன்படி, மணமக்களின் அந்த ஒப்பந்தத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஷாப்பிங் செல்ல வேண்டும், மாதாமாதம் பீட்சா வாங்கி தர வேண்டும், தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஜிம் செல்ல வேண்டும் போன்ற கண்டிஷன்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஒப்பந்தத்தில் மணமக்கள் இருவருமே மனமுவந்து கையெழுத்தும் இட்டிருந்தார்கள்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மிந்து - ஷாந்தியின் திருமணத்தின் போது நடந்த இந்த ஒப்பந்த பரிமாற்றம் குறித்த வீடியோ அப்போதே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இருப்பினும் கல்யாணத்தின் போது கையெழுத்திட்ட கண்டிஷன்படி அந்த தம்பதி பின்பற்றுகிறார்களா என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்களின் பீட்சா நிபந்தனையை மட்டும் பிரபல பீட்சா உணவகம் நிறைவேற்றியிருக்கிறது.

அதன்படி பீட்சா ஹட் உணவகம் மிந்து - ஷாந்தி தம்பதிக்கு மாதம் ஒரு முறை வீதம் ஒரு ஆண்டுக்கு இலவசமாக பீட்சா கொடுப்பதாகச் சொல்லி உறுதியளித்திருக்கிறது. இந்த நிலையில், வட மாநிலங்களில் கொண்டாடப்படும் கர்வா சவுத் நிகழ்வை முன்னிட்டு அந்த தம்பதியை அழைத்து பீட்சா விருந்து வைத்திருக்கிறது பீட்சா ஹட் உணவகம்.

இது தொடர்பான வீடியோவையும் பீட்சா ஹட் உணவகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள ஷாந்தி, “பீட்சா ஹட்டின் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் ஐந்து ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் 21ல் தான் திருமணம் செய்துக்கொண்டோம். ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும்படி எங்கள் நண்பர்கள்தான் ஐடியா கொடுத்தார்கள்.” எனக் கூறியுள்ளார்.