எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தியதால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என புகார் கூறியிருந்தார். அதனையடுத்து, எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை கமல் இன்று நேரில் பார்வையிட்டார். மேலும், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வருகிறார் கமல் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கியுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் நேரடியாக, மக்கள் பணி ஆற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் கமல்ஹாசன் நேரடியாக மக்கள் பணி ஆற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம். அவர் தீவிரமாக திரைப்பட துறையில் பணியாற்றியவர். தற்போது அரசியல் துறையில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
அதேபோல், எண்ணூர் துறைமுக கழிமுகத்தில் கமல் பார்வையிட்டதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும், “தமிழகத்தில் கமல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டால் டெங்கு, கொசு ஒழிப்புக்கு உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்யலாம். ஆலோசனைகள் சொல்லலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்படும் கருத்துகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.