குட்கா விவகாரம் தொடர்பாக இன்று 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இந்த ரெய்டினை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழலை மறைக்க அதிமுகவின் மூன்று முதலமைச்சர்களும், இரு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, இப்போது அதிரடியாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சர் விஜய பாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக, வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. அசோக்குமாரை இரவோடு இரவாக பதவி விலக வைத்து, ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். அந்தக் கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவை, வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள். பிறகு அந்த வருமான வரிக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று, தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது”என்று சாடியிருந்தார்.
இந்நிலையில், அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை.
குட்கா, பான் மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்பவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நான் சந்தித்ததில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு வெளியே வருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.