கோவையில் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தை பொறுத்த வரையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் உள்ள பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியிலும் ஆளுநர் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.