டிரெண்டிங்

கர்நாடக முதல்வரை சந்திக்க தமிழக முதலமைச்சர் முடிவு

கர்நாடக முதல்வரை சந்திக்க தமிழக முதலமைச்சர் முடிவு

Rasus

தமி‌ழக முதல்வர் தலைமையிலான டெல்டா மாவட்ட அமைச்சர்கள் கொண்ட குழு, கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நீரைத் திறந்துவிடக்கோரி தமி‌ழக முதல்வர் தலைமையிலான டெல்டா மாவட்ட அமைச்சர்கள் கொண்ட குழு கர்நாடக முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இதற்கான நாள் மற்றும் நேரம் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலர், கர்நாடக முதலமைச்சரின் முதன்மைச் செயலர்‌ ஆகியோருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‌உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.