சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 9 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்ய உள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர், தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.