அதிமுகவினர் அணிகள் இணைப்பில் கவனம் செலுத்துவதால், ஆட்சியிலோ, மக்கள் பிரச்னையிலோ கவனம் இல்லை என்று திமுகவின் செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு நினைத்தவுடன் யாருடைய வீட்டையும் எடுத்துக்கொள்ள முடியாது. தனியார் சொத்தை அரசால் பறிமுதல் செய்ய முடியாது. அதற்கு முறையான அணுகுமுறை வேண்டும். அதிமுகவினர் அணிகள் இணைப்பில் கவனம் செலுத்துவதால், மக்கள் பிரச்னையில் ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில் அதிமுக-வின் எந்த அணிகளிடமும் நாங்கள் ஆதரவு கோர மாட்டோம். அமித்ஷா ஏற்கனவே இரண்டு முறை தமிழகம் வந்து இரண்டு முறையும் தோற்றுப்போய் சென்றிருக்கிறார். இப்போது மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்” என்று கூறினார்.
மேலும், நினைவிடம் குறித்து பேச வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதல்ல, பொது அறிவு இருந்தாலே போதும் என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், ஓபிஎஸுக்கும் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.