திருவாரூர் இடைத்தேர்தலுக்காக இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கி வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் விருப்பமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதில் வேட்பாளர்கள் யார் என்ற இறுதி முடிவு இன்று மாலை வெளியாக உள்ளது. இதே போன்று அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் வேட்பாளராக களமிறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமமுக வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக தஞ்சையில் அலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. மேலும் வேட்பாளருக்கான பரிசீலனை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் விருப்ப மனு பரிசீலனை மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அமமுக வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகும் நிலையில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது.
ஜெயலலிதா பேரவையின் திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ள வெங்கடேசன், ஏற்கெனவே கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட ஏ.எம்.என் பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என இருந்தாலும் விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களின் பட்டியலை ஆராய்ந்த பிறகே யார் போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்யப்படும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.