டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 2 குடும்பங்களுக்கு உதவி செய்த திருப்பூர் தன்னார்வ குழு

துளிர்க்கும் நம்பிக்கை: 2 குடும்பங்களுக்கு உதவி செய்த திருப்பூர் தன்னார்வ குழு

நிவேதா ஜெகராஜா

திருப்பூரில் , ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்த 2 குடும்பங்களுக்கு 'ஹெல்ப்பிங் ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' வழியாக உதவியுள்ளது. அமைப்பின் மூலமாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் மாயகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களது மகள்களுக்கும் திருமணம் முடித்து விட்டு சென்றுவிட வயதான இவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னுடைய நிலையை, புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தகவல் தெரிவித்தார்.

இவரைப்போலவே திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குமாரசாமி நகர் பகுதியில் செல்வி, முனியசாமி என்பவர்களும் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகன் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்க போதிய வசதியும் இல்லை என்று சொல்லப்படுகிறது. 'வேலையும் இல்லாத காரணத்தால் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லை. கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என, தங்களின் நிலையை தெரிவித்திருந்தார்கள் அவர்கள்.

இவர்களின் நிலையை அறிந்த திருப்பூரில் உள்ள helping Heart Foundation என்ற அமைப்பு, இந்த 2 குடும்பங்களுக்கும் 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை புதிய தலைமுறை வழியாக வழங்கியுள்ளன.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

கவியரசன்