டிரெண்டிங்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு?

webteam

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை உள்ளன.

காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்,  மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 20 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர், இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று, துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுக குழுவிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருச்சி, மயிலாடுதுறை, ஆரணி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன், திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. 

கோவை, மதுரை அல்லது தென்காசி தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாகவும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்தார்.