டிரெண்டிங்

திருப்பூர்: 42 விநாடியில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை பிசகாமல் கூறும் 3 வயது சிறுவன்..

திருப்பூர்: 42 விநாடியில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை பிசகாமல் கூறும் 3 வயது சிறுவன்..

kaleelrahman

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஜஸ்மித், 42 விநாடிகளில் இந்திய மாநிலத்தின் அனைத்து தலைநகரங்களையும் சிறிதும் பிசகாமல் கூறி அசத்தி வருகிறான்.


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஜஸ்மித் , 42 விநாடிகளில் இந்திய மாநிலத்தின் அனைத்து தலைநகரங்களையும் சிறுதும் பிசகாமல் கூறி அசத்தி வருகிறான். செல்போன் கொடுக்காமல் கற்று தொடங்கிய பெற்றோர்களும், இந்த முயற்சிக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.


திருப்பூர் மாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி கௌசல்யா இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஜஸ்மித் என்ற மகன் இருக்கிறான். இவன் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை வெறும் 42 விநாடிகளில் திக்கித் திணறாமல் கூறி அசத்துகிறான்.


இதோடு இந்தச் சிறுவன் 20 க்கும் மேற்பட்ட திருக்குறள்கள், இந்தியாவின் முக்கிய தலைவர்கள், மற்றும் சில மாநிலங்களின் முதல்வர்கள் என அனைவரையும் மிகச்சரியாக கூறுகிறான். இதற்கு முன்னால் 48 விநாடிகளில் ஒரு சிறுமி அனைத்து மாநிலங்களின் தலைநகரையும் கூறியிருந்த நிலையில், 3 வயதே நிரம்பிய இந்தச் சிறுவனின் திறமையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.


ஜஸ்மித் 2 வயது குழந்தையாக இருக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே செல்போனை கேட்டு அடம்பிடிப்பான். அப்போது அவனை வேறு வகையில் திசைதிருப்ப மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்ததாக கௌசல்யா கூறினார். மேலும் ஜஸ்மித் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதால் தற்போது தமிழ் இலக்கியங்களையும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.


மழலை மாறாமல் பேசும் ஜஸ்மித்தின் திறமைக்கு ஏற்ப பெற்றோர்களின் ஊக்கமும் இருப்பதால் சிறு வயதிலேயே கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறான். ஜஸ்மித் தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று மழலை குரலில் சொன்னான்.