டிரெண்டிங்

’வொர்க் ஃப்ரம் ஹோம்’ டென்ஷனா? - கவலைய விடுங்க!

Sinekadhara

கொரோனாவின் அதிதீவிரமான சமூக பரவலால் உலகளவில் பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி இருக்கின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்வது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும், சில நாட்களுக்குப் பின்பு சலிப்பை ஏற்படுத்தும். பணியிடத்தில் நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள். அவ்வபோது இடைவேளை இருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருப்போம். வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது இவையனைத்தையும் இழக்க நேரிடும். எனவே நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம்.

காலையில் எழுந்தவுடன் குளித்துவிடுங்கள்


வீட்டிலிருந்து தானே வேலை செய்கிறோம் என்று எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்பு உட்காரவேண்டும் என்றில்லை. வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அன்றாட தனிப்பட்ட வழக்கத்தை பின்பற்றுவதை விட்டுவிடாதீர்கள். எழுந்து குளித்துவிட்டு காலை உணவை சாப்பிட்டுவிட்டு வேலையை தொடங்கினால் மனம் புத்துணர்வுடன் வேலையில் இறங்கும். திரும்ப தூக்கம் வராது.

வேலைக்கு தனி இடத்தை ஒதுக்குங்கள்
வீட்டிற்குள்ளே வேலை செய்வதற்கு சவுகரியமான ஒரு இடத்தை ஒதுக்குங்கள். இதனால் அலுவலகத்தில் நமக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற உணர்வு உருவாகும். அந்த இடத்திற்கு போகும்போது உங்கள் மனம் தன்னாலே வேலை செய்யப்போகிறீர்கள் என்று ஒத்துக்கொள்ளும். வீட்டிலிருக்கிறோம் என்ற உணர்வை மறந்து வேலையில் இருக்கிறோம் என்று உணர வைக்கும்.

தனி நாற்காலி தேவை
சிலர் படுக்கையில் ஜாலியாக படுத்துக்கொண்டு வேலை செய்தால் நன்றாயிருக்கும் என யோசிப்பீர்கள். ஆனால் ஜாலியாக மடியில் லேப்டாப்பை வைத்து வேலைசெய்யும்போது வேலையில் முழு ஈடுபாடு இருக்காது. அதற்கு பதிலாக சவுகரியமான ஒரு நாற்காலியில் அமர்ந்து வேலை செய்துபாருங்கள்.

இடைவெளி எடுங்கள்
அலுவலகத்தில் வேலைசெய்யும்போது டீ டைம், லஞ்ச் டைம் என இடைவெளிகள் இருக்கும். ஆனால் வீட்டிலிருந்தால் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டிருப்பார்கள். மூளைக்கு ஓய்வு தேவை. வீட்டிற்குள்ளே சிறிதுநேரம் நடங்கள் அல்லது மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். நாற்காலிக்கு 5 லிருந்து 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள்.

வேலையை எப்போது முடிப்பது என முடிவு செய்யுங்கள்
தனியாக அமர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தால் வேலையில் நாட்டம் இருக்காது. எனவே எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். சிலருக்கு அலுவலகமே நேரம் விதித்திருக்கும். அந்த நேரத்திற்குள் முடித்துவிட்டு உங்களுடைய நாற்காலியைவிட்டு எழுந்துவிடுங்கள்.