டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: அழைப்பை ஏற்ற 24 மணி நேரத்துக்குள் துயர் துடைப்பு

துளிர்க்கும் நம்பிக்கை: அழைப்பை ஏற்ற 24 மணி நேரத்துக்குள் துயர் துடைப்பு

நிவேதா ஜெகராஜா

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிப்போருக்கு 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலமாக பல்வேறு தன்னார்வலர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூர் - சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பேனா, கைக்குட்டை உள்ளிட்டவற்றை விற்று வந்த நிலையில், தற்போது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவி கோரினர். இதனையடுத்து துளிர்க்கும் நம்பிக்கை குழுவினர் அடுத்த நாளே நேரடியாகச் சென்று ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரை சேர்ந்த இந்திராணி என்பவர் வேலையின்றி சிரமப்பட்டு வந்த நிலையில், ஜேசிஐ அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பிரீஸ் சரவணன் ஆகியோர் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

புதுக்கோட்டையில் அத்தியாவசியத் தேவைக்கு வழியின்றி தவித்த நகைத் தொழிலாளி மணிகண்டனின் குடும்பத்திற்கு ஓயாத அலைகள் என்ற தன்னார்வ அமைப்பினர் காய்கறிகள், அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கினர். இரண்டு பெண் குழந்தைகளின் கல்வி செலவில் பாதியை ஏற்பதாகவும் தெரிவித்தனர்.

சேலம் அன்னதானப்பட்டி பாண்டு நகர் பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதிக்கு இந்தியன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஜெயபிரகாஷ் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். நாராயணநகர் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி முஹம்மது என்பவருக்கு, வீ மீன்ஸ் பவர் அமைப்பைச் சேர்ந்த தீபா பிரியதர்ஷினி மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் உடல்நலக் குறைவால் பாதிக்கபட்ட ராஜேந்திரன் உதவி கோரியிருந்த நிலையில், அவருக்கு பசியில்லா நத்தம் அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் மதுசூதனன் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'