திருச்சூர் அடுத்த எலவள்ளியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் கோவில் திருவிழா என்றால் யானைகளின் பங்கு அதிகமாக இருக்கும். இதனால் அப்பகுதியில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் யானைகள் வளர்க்கப்படுவதுடன், விழாக்களுக்கு யானைகளை வாடகைக்கு எடுக்கும் நிகழ்வும் நடக்கும். அதன்படி திருச்சூரை அடுத்துள்ள ஒரு கோவில் விழாவிற்கு கூட்டி வரப்பட்ட யானை ஒன்று சீற்றம் கொண்டு இருவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருச்சூரை அடுத்த சித்தட்டுக்கரை பைன்கன்னிகல் கோவிலில் நடைப்பெற்று வரும் திருவிழாவுக்காக சிட்டிலப்பள்ளியிலிருந்து கணேசன் என்ற யானை கொண்டு வரப்பட்டுள்ளது.
யானையுடன் வந்த யானைப்பாகன், யானையை குளிக்கவைத்தப்பொழுது, கோபம் கொண்ட யானை பாகனை தாக்கியுள்ளது, இதை அறிந்த அப்பகுதியில் இருந்த சிலர், பாகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், சிலர் யானையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளனர்.
ஆனால், அவர்களால் யானையின் சீற்றத்தை தணிக்க முடியவில்லை. இந்நிலையில், சீற்றத்துடன் இருந்த யானை, தனியாக சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் பிளிரிக்கொண்டே ஓடிச் சென்றுள்ளது. அச்சமயம் கோவில் திருவிழாவிற்காக எதிரே வந்த ஆனந்த் என்ற தொழிலதிபரை அந்த யானை தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யானைப்படையினர், சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு கண்டணசேரி பகுதியில் யானையின் சீற்றத்தை அடக்கி, அதனை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த யானைப்பாகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.