டிரெண்டிங்

ஹாட்ரிக் அடிப்பாரா தங்கம் தென்னரசு? - திருச்சுழி தொகுதியில் மும்முனை போட்டி!

ஹாட்ரிக் அடிப்பாரா தங்கம் தென்னரசு? - திருச்சுழி தொகுதியில் மும்முனை போட்டி!

webteam

பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் 3-வது முறையாக வாகை சூடுவாரா, அவருக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி என்ன என்பத விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை

தொகுதி சீரமைப்பின்போது, அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து திருச்சுழி தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருச்சுழியியின் பெரும்பாலான பகுதிகள் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்தன. 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும், திமுகவைச் சேர்ந்த தங்கம் தென்னரசு அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இங்கு அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் சுதந்திரா கட்சி, பார்வார்டு ப்ளாக் மற்றும் சுயேச்சை ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. திமுகவைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் அருப்புக்கோட்டை தொகுதியில் 1989 மற்றும் 1996-ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார்.

அவர் மரணம் அடைந்ததால் 1998-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் தங்கம்தென்னரசு வெற்றி பெற்றார். 2001-ல் தோல்வியடைந்த தங்கம் தென்னரசு, 2006-ல் இங்கு வெற்றி பெற்று, கருணாநிதி அமைச்சரவையில் புதிதாக உருவாக்கப்பட்ட பள்ளி கல்வித்துறையின் முதலாவது அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

தற்போது திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமான இவர் அமைச்சராக இருந்தபோது ஆற்றிய பணிகளும் இந்தத் தேர்தலில் கைகொடுக்கின்றன. அதிமுக கூட்டணியில், மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான இளையான்குடியை சேர்ந்த எஸ்.ஆர்.ராஜசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கேரளாவில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் எஸ்.ஆர்.ராஜசேகர் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சுழி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி போட்டியிடுகிறார். முடுக்கன்குளத்தை சேர்ந்த சிவசாமி தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர். அருப்புக்கோட்டை தொகுதியில் 2001-ல் தங்கம் தென்னரசுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் செப்லிங்கப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவர் போட்டியிடுகிறார்.மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், ஜனநாயக திராவிட கழகத்திற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் திருப்பூரைச் சேர்ந்த முருகன் என்பவர் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், அதிமுக ஆதரவுடன் மூவேந்தர் முன்னேற்ற கழகமும், அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் களத்தில் இருப்பதால், திருச்சுழியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை மே 2-ல் தெரிந்து கொள்ளலாம்.