காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைவர்கள் இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தனர். இறுதியில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3 தீர்மானங்கள் விவரம்:-
தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பின்படி 6 வார காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என முதல் தீர்மானம் தெரிவிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் வழங்கிய நீரில் 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கி உத்தரவிட்டது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்தின்படி சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க இரண்டாவது தீர்மானம் வகை செய்கிறது.
முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழக அனைத்து எம்.பி.க்கள் அடங்கிய குழு, பிரதமரை விரைவில் சந்திக்க மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு பிரதமரை வலியுறுத்த உள்ளதாகவும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.