Thozhi - ladies hostel
Thozhi - ladies hostel Twitter
டிரெண்டிங்

”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

PT WEB

வீட்டிற்குள்ளே முடங்கி அடுப்பறையின் அனல் காற்றை சுவாசித்த பெண்கள் தற்போதுதான் இயற்கை காற்றையும் சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர்.  இதன் எதிரொலித்தான்  தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல்கடந்து செல்லவும் ஆரம்பித்துவிட்டனர். கடல்கடந்து சென்றாலும் பாதுகாப்பில் என்னவோ சில நேரங்களில் கேள்விக்குறியாக தான் உள்ளது. இப்படி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு அரசானது 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' (TAMIL NADU WORKING WOMEN'S HOSTEL CORPORATION Ltd) சார்பில்‌ பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதியை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.

இந்த  "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNWWHCL)" என்ற பிரத்யேக நிறுவனத்தை தமிழ்நாடு அரசானது 28.05.2019  அன்று 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவி  பிப்ரவரி 6 , 2020 அன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இணைத்தது. பணிபுரியும் பெண்களுக்கான "மகளிர் தங்கும் விடுதிகள்" பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக நிறுவப்பட்டது.

" தோழி" என்று அழைக்கப்படும் இவ்விடுதி பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் அமைக்கப்பட்டுள்ளது.தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகளின் பதிவு செய்தும் கொள்ளலாம்.

Thozhi - ladies hostel

அமைந்துள்ள இடங்கள்:

இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வசதிகள்:

சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

Facilities

நேரம்:

இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

முழுமையான விவரங்களுக்கு:

http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம்.

தமிழ்நாடு அரசின் "தோழி" பெண் விடுதி பலதரப்பு பணிபுரியும் பெண்களின் விடுதி சார்ந்த‌ தேவையற்ற செலவுகளை தடுக்கும் வண்ணம் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

- Jenetta Roseline S