பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் இந்தியாவில் இடமில்லை என்று கனடா பிரதமரை வைத்துக் கொண்டே செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத்தில் காந்தி ஆசிரமத்திற்கும், பஞ்சாப்பில் பொற்கோவிலுக்கும் குடும்பத்தினருடன் சென்றார்.
இதனிடையே, ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கனடா பிரதமர் ட்ரூடோ சார்பில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. விமர்சனங்கள் எழுந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினம் விமர்சனங்கள் தொடர்ந்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். பின்னர் அவருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் இருநாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப்பின், அணுசக்தி அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தியில் ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துரிமை, பொலிவுறு நகரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர், இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மோடி, இந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களை பொறுத்துக் கொண்டிருக்கமுடியாது என கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்தித்த பின்னர் அவர் தெரிவித்த இந்தக் கருத்து காலிஸ்தான் விவகாரத்தில் கனடா மென்மையான போக்கை கடைப்பிடிப்பதற்கான கண்டனமாக பார்க்கப்படுகிறது. மேலும், தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவும், நானும் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மோடி தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ பேசுகையில், இந்தியாவும் கனடாவும் இயல்பாகவே நல்லுறவைப் பேணி வரும் நாடுகளாக இருப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கு இடையே உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக கூறிய கனடா பிரதமர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா விரைவான வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.