கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுத்ததற்கு பினராயி விஜயனிடம் தொல்.திருமாவளவன் நேரில் நன்றி தெரிவித்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுத்ததற்கு பினராயி விஜயனிடம் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்திருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தோர் 6 பேர் என்பது சிறப்புக்கு உரியது. கேரள அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.