டிரெண்டிங்

மோதல், அரிவாள் வெட்டு, துப்பாக்கி சூடு.. : திமுக எம்.எல்.ஏ கைது வரை முழு விவரம்..!

மோதல், அரிவாள் வெட்டு, துப்பாக்கி சூடு.. : திமுக எம்.எல்.ஏ கைது வரை முழு விவரம்..!

webteam

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதேப்பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கும், இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலத்துக்கு பாதை அமைப்பதற்காக, அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குமார் தரப்பினர் சாலை அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக இருதரப்பினருக்கும் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், குமார் மற்றும் அவரது தரப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களுடன் ஜேசிபி மற்றும் டிராக்டர் வாகனங்களுடன் நேற்று அப்பகுதிக்கு சென்று கோயில் நிலத்தில் சாலை அமைக்க முயன்றதாக தெரிகிறது. இதனால், கிராம மக்கள், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி ஆகியோர், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை வாக்கு வாதமாக மாறி, பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருதரப்பினரும் அழைத்து வந்திருந்த ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது தம்பி குருநாதன் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எம்எல்ஏ இதயவர்மன் தனது பாதுகாப்புக்காக இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குமார் காரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து அவர் காயமடைந்ததாக தெரிகிறது. மேலும், குமார் தரப்பினரின் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த தகவல் போலீசாருக்கு தெரியவர, மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிந்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

துப்பாக்கி குண்டால் காயமடைந்த சீனிவாசன் செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்துடன் இருதரப்பு மோதலில் காயமடைந்த எம்எல்ஏ தந்தை லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குமார் தரப்பினரில் காயமடைந்த நபர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் திருப்போரூர் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஏஎஸ்பி .சுந்தரவதனம் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சம்பவ இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பவ இடத்திலிருந்த ஜேசிபி, டிராக்டர் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கண்ணன், “செங்காடு கிராமத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாக விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்பட்ட மோதலின்போது, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை பயன்படுத்தி எதிர்தரப்பினரை எம்எல்ஏ இதயவர்மன் சுட்டுள்ளார். அத்துடன் மோதலின்போது எம்எல்ஏவின் தந்தை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, எதிர்தரப்பை சேர்ந்த குமார் மற்றும் துப்பாக்கி குண்டால் காயமடைந்த வழிப்போக்கர் சீனிவாசன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. எனினும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், புதுப்பிப்பதற்காக காவல்துறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.



எம்எல்ஏ கைத்துப்பாக்கியால் சுட்டதை உறுதிபடுத்தியுள்ளோம். இதனால், சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மீது கொலை முயற்சி, ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியது (147, 148, 348, 307) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை உள்ளிட்ட சிலரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள எம்எல்ஏ இதயவர்மனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். முதற்கட்டமாக வெளியாகியிருந்த தகவலில் எம்.எல்.ஏ இதயவர்மன் சம்பவம் நடந்த இடத்தில் இல்லையெனவும், அவரது தந்தையே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் எம்.எல்.ஏ இதயவர்மனை சென்னை மேடவாக்கம் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவரை செங்கல்பட்டில் உள்ள மருவா மஹாலில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.