ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லாதது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் உடல்நிலை பற்றி அமைச்சர்கள் கவலைப்படவில்லை. ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்காத அமைச்சர்கள் தற்போது மாற்றி மாற்றி பேசுவது மோசடியானது. தொற்று ஏற்பட்டுவிடும் எனக் கூறி மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவை, சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவும் தனது உடல்நிலையை கவனித்துக் கொள்ளாதது கவலைக்குரியது” என்றார்.
செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த முதல் மருத்துவ அறிக்கையை புதிய தலைமுறை வெளியிட்டது. இதுதொடர்பான விவாதத்தில் பேசிய திருநாவுக்கரசர் இதனை தெரிவித்தார்.