டிரெண்டிங்

“விஜயகாந்தை பிரேமலதா இழிவுபடுத்துகிறார்” - திருநாவுக்கரசர்

webteam

சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதலுக்கு திமுகதான் காரணம்
என பிரேமலதா கூறியுள்ளது, விஜயகாந்தை இழிவுப்படுத்தும் செயல் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

2019 தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர்
பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அன்று என்ன நடந்தது என்று பல பேருக்குப் புரியாது. ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். சட்ட சபையில் நடந்த மிகப்பெரிய பிரச்சனைக்கு பின்னால் இருந்தது திமுகவுடைய சூழ்ச்சிதான்.

எதைச்சொன்னால், கேப்டனை உணர்ச்சிவசப்படுத்தலாம். எப்படி நடந்துகொண்டால் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தலாம். என்பதை தெரிந்து கொண்டு, ஜெயலலிதாவை எரிச்சல்படுத்துற மாதிரி சில வார்த்தைகளைப் பேச வைத்தனர். அதிமுக தேமுதிக கூட்டணியைப் பிளவுபடுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டமன்றத்திலேயே சதி செய்து, கூட்டணியை முறிக்கச் செய்தனர்” எனப் பேசினார். 

இந்நிலையில்,சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதலுக்கு திமுகதான் காரணம் என பிரேமலதா கூறியுள்ளது, விஜயகாந்தை இழிவுப்படுத்தும் செயல் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

மேலும், “ விஜயகாந்த் சுயமாக சிந்தித்து சுயமாக செயல்பட்டது இல்லையா? யாராவது சொல்வதை கேட்டுதான் செய்வாரா? மனைவியே அவர் சொந்த புத்தியுடன் செயல்படவில்லை எனக்கூறுவது சரியல்ல. அவர் கணவரை இழிவுபடுத்தும் செயல். விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மற்றவர்கள் கூறியதை கேட்டுதான் செயல்பட்டார் என அவதூறாக பிரேமலதா பேசக்கூடாது. இதுபோன்ற விமர்சனங்களை பிரேமலதா விஜயகாந்த் வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்.”  எனக் குறிப்பிட்டார்.