டிரெண்டிங்

“தேர்தல் முறையை ஒழிக்க பாஜக முயற்சி” - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

webteam

தேர்தல் என்ற முறையை ஒழிக்க பாஜக முயற்சி செய்வதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் 75 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கையில் இருக்கிறது. பாஜகவிற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் இயங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன நிறுவனம் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். 

நடுநிலையாக தேர்தல் நடத்தக்கூடிய நிலைமை இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இல்லை. மறுபடியும் விவசாயிகளை கடனாளியாக ஆக்க பார்க்கிறார்கள். ஜனநாயக முறையை மூடிவிட்டு நீதிமன்றங்களை தங்கள் கையில் கொண்டுவந்துள்ளனர். இவர்கள் இந்திய ஏழை மக்களுக்கோ விவசாயிகளுக்கோ எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இந்தியாவின் பொருளாதிட்டம் குறித்து ஆய்வு பூர்வ அறிக்கை இல்லை. கல்வியை பொறுத்தவரை 3.4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதத்திற்கு பாஜக அரசு குறைத்துள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை கொண்டுவருவோம் எனக் குறிப்பிட்டுள்ள பாஜக மற்ற மொழிகளை பற்றியும் துறைகளை பற்றியும் பேசவில்லை. தேர்தல் என்ற முறையை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது.” எனத் தெரிவித்தார்.