மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பகல் 12 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது முகநூலில் தலித்தை வேலைக்காரர்களாக வைத்திருக்கிறேன் என்று வைகோ கூறுவது சாதீய ஆதிக்கமாகவும், நிலபிரபுத்துவ ஆதிக்கமாகவும் பார்ப்பதாக பதிவிட்டிருந்தார். பின்பு அதை நீக்கிவிட்டார்.
இதையடுத்து சாத்தூரில் மதிமுக வாக்குச்சாவடிகள் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வன்னியரசுவின் முகநூல் பதிவை கடுமையாக சாடினார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் தேர்தல் செலவுக்காக திருமாவுக்கு 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திருமாவளவன், ”தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான். தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை. ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது” என தெரிவித்தார்.
இதனால் வைகோ-திருமாவளவன் ஆகிய இருவரிடையே இந்த விவகாரத்தில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பகல் 12 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் சந்திக்கிறார். சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைகோவை திருமாவளவன் சந்தித்து பேசவுள்ளார்.