ஆண்டுதோறும் அம்பேத்கர் நினைவு நாளை அனுசரிக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டு ஏன் விளம்பரம் கூட செய்யவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
அம்பேத்கரின் 61ஆம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். இதுதவிர அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அமைச்சர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள் இந்த ஆண்டு ஏன் விளம்பரம் கூட செய்யவில்லை என அரசு விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் விஷால் வேட்புமனு திட்டமிட்டே நிராகரிப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.