மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநரின் நடவடிக்கை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான முன்னோட்டமா என்ற அச்சம் ஏற்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த செயல், தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுவிட்டதா அல்லது அதற்கான முன்னோட்டமா என்ற அச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். பொறுப்பு ஆளுநநர் வித்யாசாகர் ராவ் ஒளிவுமறைவின்றி அரசியல் சார்பு நிலையை வெளிக்காட்டி வந்தததாக தெரிவித்துள்ள திருமாவளவன் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் புரோகித்தும் பாஜகவின் பிரதிநிதியாக செயல்பட முனைகிறாரோ என்று தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநரின் வரம்பு மீறிய செயல்பாடு அரசியல் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமின்றி வாக்களித்து அரசை தேர்ந்தெடுத்த குடிமக்களையும் அவமதிப்பதாக உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லி, புதுச்சேரி முதலான யூனியன் பிரதேசங்களிலும் கூட ஆளுநர் வரம்பு மீறி நடந்துகொண்டால் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஆளுநருக்கு முதலமைச்சர் எவ்வித அதிருப்தியையும் தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். தனது எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால் அவரது அதிகாரம் பறிபோகும் என்பதை முதலமைச்சர் புரிந்துகொண்டு காலம் தாழ்த்தாமல் உடனடியாக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.