டிரெண்டிங்

“சர்க்கரை நோயாளி அம்மாவுக்கு அல்வா கொடுத்தார்கள்” - சி.வி.‌சண்முகம் புகார்

“சர்க்கரை நோயாளி அம்மாவுக்கு அல்வா கொடுத்தார்கள்” - சி.வி.‌சண்முகம் புகார்

rajakannan

அதிதீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு தொடர்ந்து அல்வா கொடுக்கப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திட்டமிட்டே ஜெயலலிதாவின் மரணம் வரவ‌ழைக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒருவரை விஷம் கொடுத்துதான் சாகடிக்க வேண்டும் என்பது இல்லை. வெல்லம் கொடுத்தும் சாகடிக்கலாம். அதுதான் அம்மாவுக்கு நடந்தது. அம்மா கடுமையான சக்கரை நோய் உள்ளவர். மருத்துவமனையில் இருக்கும்போது யாராவது அல்வா கொடுப்பார்களா? ஆனால், இவர்கள் கொடுத்தார்கள். 

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அம்மாவுக்கு இனிப்பு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன எண்ணம்? நோயின் தன்மை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் முற்றி மரணம் இயற்கையாக நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்” என்று கூறினார். 

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைச்சர் சி.வி.‌சண்முகம் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக, மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டினார்.