டிரெண்டிங்

Nostalgic-னா இதுதானா? - BFF Goal-க்கு டஃப் கொடுத்த பாட்டிகளின் உணர்ச்சிமிகு சந்திப்பு!

JananiGovindhan

“நண்பனை பார்த்த தேதி மட்டும் ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்” என்ற பாடல் வரிக்கு உயிர் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது வயதான தோழிகள் இருவரும் பல காலம் கழித்து சந்தித்துக் கொண்ட நிகழ்வு. அவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த சந்திப்பு குறித்த வீடியோதான் சமூக வலைதளத்தில் இன்றைக்கு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

எத்தனை ஆண்டுகள் கழித்து பிடித்த தோழி/தோழனை சந்தித்தாலும், இத்தனை நாட்களாக பேசவில்லையே என்ற ஏக்கத்தை காட்டிலும், முன்பு எப்படி பேசி பழகினார்களோ அதே பந்தத்துடனேயே பேசுவார்கள். இது மற்ற எல்லா உறவுகளை காட்டிலும் நட்புக்குள் மட்டுமே சாத்தியமாக இருக்கும். அப்படிதான் இந்த பாட்டிகளும் சந்தித்துக் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

கேரளாவைச் சேர்ந்த முகில் மேனன் தனது பாட்டியை அவரது உற்றத் தோழியுடன் சந்திக்க வைத்திருக்கும் நிகழ்வு குறித்த வீடியோதான் நெட்டிசன்களின் மனதை வென்றிருக்கிறது. இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “80 ஆண்டுகால நட்பு இது. தனது தோழியை காண வேண்டும் என எப்போதும் என்னிடம் என் பாட்டி சொல்வதுண்டு. அதனால்தான் தற்போது அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறேன். அப்போது இருவரும் தங்களுடைய நாஸ்டாஜிக் நினைவலைகள் குறித்து பகிர்ந்து பேசினார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முகிலின் பாட்டியும் அவரது தோழியும் பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டதும் திருப்திகரமாக இருந்ததை அவர்களது புன்முறுவல் மூலமே அறிந்துக்கொள்ள முடிகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “இந்த வீடியோ எனக்கு அழுகையை வர வைத்துவிட்டது” என்றும், “மிகவும் அருமையான வீடியோ. இருவரும் சந்தித்ததே க்யூட்டாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.