சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் உரையாற்றிய ஸ்டாலின், நான் அதிகம் பேச முடியாது என்றும், செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், திமுக சார்பாக ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக பீட்டர் அல்ஃபோன்ஸும் மற்றும் பல்வேறு கிருத்துவ திருச்சபைகளை சார்ந்த மத போதகர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பேசிய ஸ்டாலின், “கிறித்துமஸ் விழா நடைபெறும் சூழலில் தேர்தல் பிரச்சார விழாவும் ஒரு பக்கம் நடைபெறுகிறது. நான் அதிகம் பேசும் சூழலில் இல்லை. செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நலத்திட்ட உதவிகள் அரசுதான் வழங்க வேண்டும்; ஆனால் ஆண்டுதோறும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க தனி அமைச்சகம் கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
மேலும், “ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் கவலைக்கிடமாக உள்ளது. அதனைக்கண்டு கொள்ளாத அரசுதான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீனவர்களுக்கு தனி சட்டம் மத்தியில் அமைக்க வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். தனி அமைச்சகம் அமைக்க மத்தியில் மக்கள் விரும்பும் ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் பயன்படக்கூடிய ஆட்சியும் விரைவில் அமையும்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.