டிரெண்டிங்

"சிலை இருக்கு விலை இல்லை" சேலத்தில் தேங்கியுள்ள விநாயகர் சிலைகள் !

kaleelrahman


சேலத்தில் விநாயகர் சிலைகள் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி விழா அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் இரண்டாவது அக்ரஹாரம் சாலை பொலிவிழந்து காணப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாட்களில் விநாயகர் சிலைகளை வாங்கி செல்ல பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் அதிகஅளவில் கூடுவர்.


பொது இடங்களில் பெரிய சிலைகளை வைத்து கொண்டாடுவோர் சிலைகளை எடுத்து செல்ல சரக்கு ஆட்டோக்களில் மேளதாளம் முழங்க உற்சாகமாக வருவர். ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் பெரிய சிலைகளின் விற்பனை முற்றிலுமாக முடங்கியுள்ளது.


அரை அடி உயரம் முதல் 3 அடி உயரம் வரையிலான சிலைகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை கெடுபிடி, கொரோனா முடக்கத்தால் போதிய வருவாய் இன்மை உள்ளிட்ட காரணங்களால் விற்பனை மந்தமாகி பல்லாயிரக்கணக்கான சிலைகள் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளதாக விற்பனையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.