வீட்டின் சாவியை எடுத்து பூட்டை திறந்து நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பேட்டை, பாரதியார் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி. ஓய்வு பெற்ற இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியரான இவர், இன்று காலை 5 மணியளவில் வீட்டின் கீழ் தளத்தை பூட்டிவிட்டுச், சாவியை அருகில் உள்ள ஜன்னலில் வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார்.
முதல் தளத்தில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்ததை நோட்டமிட்ட மர்மநபர், சாவியை எடுத்து வீட்டினுள் சென்று பீரோவில் இருந்த 4 சவரன் தங்கநகை, வெள்ளி பொருட்கள், செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
ஒருமணி நேரத்தில் மூர்த்தி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.