டிரெண்டிங்

பைக் திருடனை துரத்திப் பிடித்த ஆய்வாளர்... கொள்ளையன் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி

webteam

சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கரவாகனங்கள் திருடு போவதாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இரு சக்கர வாகனங்களை திருடும் கொள்ளையனான, பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23) கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் பிறந்தநாள் விழா ஒன்றிற்கு வந்துள்ளதாக அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. உடன் தனிப்படை போலீசாருடன் கண்ணன் அங்கு சென்றார்.

காவல் ஆய்வாளரை கண்டதும் விக்னேஷ் அங்கிருந்த ஓடினார். இதனையடுத்து அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற  கண்ணனை கொள்ளையன் விக்னேஷ் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் கண்ணனுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் கொள்ளையன் விக்னேஷை கண்ணன் பிடித்து விட்டார். இதில் விக்னேஷூக்கும் இடது கணுக்காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தற்போது விக்னேஷை அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கோயம்பேடு காவல் நிலைய நுண்ணறிவு காவலரின் பைக்கை திருடியதும் இவர் தான் என்பது  தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.