டிரெண்டிங்

கனிமொழி சந்தித்த பிரச்னை போன்று நானும் சந்தித்திருக்கிறேன்- ப.சிதம்பரம்

கனிமொழி சந்தித்த பிரச்னை போன்று நானும் சந்தித்திருக்கிறேன்- ப.சிதம்பரம்

webteam

கனிமொழி சந்தித்த பிரச்னை போன்று தானும் பல முறை சந்தித்திருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விமான நிலையத்தில் தன்னிடம் பேசிய மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவலரிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்டி கேட்டதாகவும் அதற்கு அவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, விமான நிலையத்தில் மொழி குறித்து கேட்பது வழக்கத்தில் இல்லை என்று மத்திய தொழிற் பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து கனிமொழியிடம் தகவல்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிஐஎஸ்எஃப் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியின் விரும்பத்தகாத அனுபவம் அசாதாரணமானது அல்ல என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “தொலைபேசி உரையாடல்களின் போதும், சில சமயங்களில் நேருக்கு நேர் பேசும்போதும், நான் இந்தியில் பேச வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தும் சாதாரண குடிமக்களிடமிருந்தும் இதேபோன்ற கேலிகளை நான் அனுபவித்திருக்கிறேன்.

இந்தி,ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகளாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உண்மையாகவே நினைத்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கற்க வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு பதவிகளில் இந்தி அல்லாத மொழி பேசும் நபர்கள் விரைவாக இந்தி மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மத்திய அரசு பதவிகளில் இந்தி பேசும் நபர்கள் ஏன் ஆங்கிலம் கற்க முடியாது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.