மேகதாது அணை விவகாரத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏறப்டும் என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆரம்ப பணிகளும் தொடங்கிவிட்டன. இதனை எதிர்த்து நேற்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுகவும், தமிழக அரசும் மேகதாது அணையை கடுமையாக எதிர்த்துள்ளது. இதுதவிர தமிழக எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால் கர்நாடக அரசு மேகதாது அணை தமிழகத்திற்கே நன்மை பயக்கும் எனக்கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை கூட கர்நாடகா இதுவரை ஏற்றதில்லை என பட்டியலிட்டார். காவிரி நீரை நம்பியே தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளதை குறிப்பட்ட முதல்வர், மேகதாது அணை கட்டி அதில் 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தேக்கினால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என்றார். அணைகளிலல் போதிய தண்ணீர் இருந்தபோதே தமிழகத்திற்கு நீர் தராத கர்நாடகா, மேகதாது அணை கட்டியப்பின் மட்டும் எப்படி நீர் தரும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், காவிரி விவகாரத்தை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்ததாக வரலாறே இல்லை என்றும் விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னை போயஸ்கார்டன் வீட்டின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்பது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய வேண்டும். தமிழகத்திற்கு பாதிப்பு ஏறப்டும் என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ரிசர்வ் வங்கியில் அதிகாரிகள் ராஜினாமா செய்வது குறித்த கேள்விக்கு உண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது என ரஜினி தெரிவித்தார்.