முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வழி செய்யும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி இஸ்லாமியர்களின் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு முத்தலாக் சட்டவிரோதம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வழங்கியது. இதையடுத்து முத்தலாக்கை சட்டவிரோதம் என அறிவிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் மசோதாவை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்தார். முத்தலாக் சொல்வோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை முதல் அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. மசோதாவை தாக்கல் செய்த பின்னர் பேசிய ரவிசங்கர் பிரசாத், இஸ்லாமிய பெண்களின் உரிமை மற்றும் நீதிக்கானது என தெரிவித்தார். இதற்கிடையில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய காங்கிரஸ், நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்குபின்னர் சட்டமாக்கவேண்டும் என தெரிவித்தது. மேலும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
முத்தலாக் மசோதாவிற்கு காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், அதிமுக, திரிமூனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. புதிய மசோதாப்படி முத்தலாக் கொடுத்தால் சட்டப்படி கிரிமனல் குற்றமாக கருதப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக்கப்படும் என்ற விதி உள்ளது.