டிரெண்டிங்

ஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

rajakannan

தமிழக அரசியலில் செய்ததை போல் ஆந்திராவிலும் குழப்பத்தை ஏற்படுத்த மோடி பார்க்கிறார் என்று சந்திர பாபு நாயுடு நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தனது உறவை முறித்துக் கொண்டது. தற்போது, தனது கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும்  ஆந்திர எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல் பாஜக அரசும் தங்களை மோசம் செய்துவிட்டது என்று சந்திரபாபு நாயுடு தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, தமிழகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே செய்ததை போல் ஆந்திராவிலும் அரசியல் செய்ய மோடி நினைக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு நேரடியாக விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி.க்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய போது இவ்வாறு பேசினார்.

சந்திரபாபு பேசுகையில், “தமிழகத்தில் அதிமுகவின் குழப்பமான சூழல் நிலவிய போது, ஈபிஎஸ் அணிக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பினருக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்தார். அதேபோல் ஆந்திராவில் எனக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் இருவரையும் மோடி பயன்படுத்துகிறார். ஆந்திர மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, தமிழகத்தில் செய்ததை போல் ஆந்திராவில் அரசியல் செய்ய நினைக்கிறார். நாட்டில் பாஜக எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு அலை உள்ளது. இதுதான் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது” என்று விமர்சித்தார்.

நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும், சந்திர பாபுவுக்கும் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், 2019 தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக நேற்று முன் தினம் அறிவித்தார். தனக்கு ஆதரவாக இருப்பார் என்று தெரிந்த பவன் கல்யாண் தனித்துப் போட்டியிடுவதற்கு பின்னால் மோடி உள்ளார் என்று கருதி சந்திரபாபு இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.