டிரெண்டிங்

''அப்பாவுக்கு நெசவு , அம்மாவுக்கு சாலையோரம் சிக்கன் கடை ’’ - நடராஜன் பகிர்ந்த கதை..!

''அப்பாவுக்கு நெசவு , அம்மாவுக்கு சாலையோரம் சிக்கன் கடை ’’ - நடராஜன் பகிர்ந்த கதை..!

JustinDurai

''அப்பா நெசவு தொழிலாளி. அம்மா சாலையோரம் சிக்கன் கடை நடத்துபவர்..'' கடந்துவந்த பின்னணி பகிரும் நடராஜன்.. 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள 29 வயதாகும் தமிழக வீரர் நடராஜன் மிக அற்புதமாகப் பந்துவீசி, குறிப்பாக யார்க்கர் பந்துகளை வீசி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்

இதையடுத்து உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ மற்றும் ஷேவாக் ஆகியோர்  நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் நடராஜனின் நேர்காணல் வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறுகையில், ‘’நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது சொந்த ஊர் சேலத்திலிருந்து 36 கி.மீ. தொலைவிலுள்ள சின்னப்பம்பட்டி என்கிற கிராமம். எனது அப்பா நெசவு தொழிலாளி. அம்மா சாலையோரம் சிக்கன் கடை நடத்துகிறார். உடன்பிறந்தவர்கள் 3 சகோதரிகள், ஒரு தம்பி, நான்தான் மூத்தவன். அரசு பள்ளியில் படித்தேன். ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்ததை நினைத்து பெருமையாக உள்ளது

 எனது சொந்தக்கார அண்ணன் மூலமாக சென்னையில் கிரிக்கெட் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் கரியர் ஆரம்பித்தது. அனால் பணத்துக்கு மிகவும் சிரமப்பட்டேன். எங்கேயாவது பயணம் போக வேண்டுமென்றால் கூட அதற்கு பணமிருக்காது. அதனால் டோர்னமென்ட்டுகளில் விளையாடி கிடைக்கும் பணத்தை எனது செலவுக்காக வைத்துக் கொள்வேன்’’ என்று தெரிவித்தார். மேலும் பல வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் நடராஜன். அவரது கிரிக்கெட் பயணத்துக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்திய அணியில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.