2ஜி வழக்கில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி கூறியிருப்பதன் மூலம் சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 2ஜி வழக்கில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி கூறியிருப்பதன் மூலம் சி.பி.ஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு கோப்புகளில் உள்ளவற்றை தனது அதிகார வரம்பை மீறி கற்பனையாக வெளியிட்டவர் முன்னாள் தணிக்கை அதிகாரி வினோத் ராய். அவர் மீது குற்ற வழக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளாக எந்த ஆதாரமும் சமர்ப்பிக்காததால் மேல் முறையீடு சென்றாலும் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.2ஜி வழக்கு தீர்ப்பு திமுக - பாஜக கூட்டணிக்காக என கூறுவது கற்பனை.கூட்டணி வைக்க அவர்கள் இருவருக்கும் தற்போது எந்த தேவையும் இல்லை எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுக கூட்டணியை மேலும் வலு சேர்க்கும்.தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்காமல் தடுக்கும்.ஆர்.கேநகரில் தேர்தல் விதி மீறல்கள் நடந்திருந்தாலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்பதில் மத்திய,மாநில அரசுகளின் செயல்பாடு வெட்க கேடானது. கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதித்தது முதல் மரணம் வரை என்ன நடந்தது என்பது தொடர்பாக சசிகலா தரப்பினர் மக்களுக்கு உள்ள சந்தேகத்தை முழுமையாக தீர்க்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.