டிரெண்டிங்

’காஷ்மீர் மக்கள் தங்களை சீனா ஆள்வதையே விரும்புவார்கள்’ - ஃபருக் அப்துல்லா

sharpana

’காஷ்மீரிகள் தங்களை இந்தியர் என்று நினைக்கவில்லை. சீனாவால் ஆளப்படுவதை விரும்புவார்கள்’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபருக் அப்துல்லா எம்.பி கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் அவர், ’காஷ்மீர் மக்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். மத்திய அரசு மீது காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்துகிறார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன் திடீரென காஷ்மீர் முழுக்க ராணுவத்தினரைக் குவித்தது குறித்து கேட்டபோது, அது பாதுகாப்பு நோக்கங்களுக்கான மட்டுமே என்று என்று என்னிடம் பொய் சொன்னார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீரிகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் இந்து பெரும்பான்மையை உருவாக்க நினைக்கிறது பாஜக’ என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டத்தையடுத்து காஷ்மீரின் முக்கியத் தலைவர்களான ஃபருக் அப்துல்லாவும், அவரது மகன் உமர் அப்துல்லாவும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தியும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதில், ஃபருக் அப்துல்லா எம்.பியாக இருப்பதால் திமுக,காங்கிரஸ்,மஜத உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் ’இங்கு கேள்வி கேட்கவேண்டிய எங்கள் நண்பர் எங்கே?’ என்று குரல் கொடுத்தனர். அதன்பிறகு, அவர் ஏழு மாத வீட்டுக்காவலுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில்தான், தற்போது தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.